Latest Post

 தூத்துக்குடி: சாலையில் தேங்கியுள்ள மழைநீர் - மாணவ மாணவிகள் அவதி

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும் மாணவ மாணவிகள்;. மழை நீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11, 12 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தண்ணீரில் நடந்து செல்கின்றனர். 


மேலும் மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பிறகும் மழைநீர் தேங்கியதால், அந்த மழை நீரில் கழிவு நீரும் கலந்து உள்ளது. இந்த தண்ணீரில் நடந்து செல்லும் மாணவ மாணவிகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை துரித நடவடிக்கை கொண்டு மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 உகாண்டாவின் பூண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு மக்களினால் ’டிங்கா டிங்கா’ என இந்தக் காய்ச்சலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களையும் சிறுமிகளையும்தான் அதிகம் பாதிப்பதாக உகாண்டா நாட்டின் ஊடகமான ’தி மானிட்டர்’ தெரிவித்துள்ளது.




இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பதில்கூடச் சவாலை உண்டாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரையில் இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் கியிதா கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்தச் சிகிச்சையினால் பாதிக்கப்பட்டோர் ஒருவார காலத்திற்குள் குணமடைந்து விடுகின்றனர். பூண்டிபுக்யோ மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் இந்த நோய் பரவவில்லை. மூலிகை மருத்துவம் இந்த நோயைக் குணப்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

நாங்கள் குறிப்பிட்ட சிகிச்சைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்திற்குள் உள்ள சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற உள்ளூர் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோய்க்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று இதற்கு முன்னர் 1518 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் டேன்சிங் ப்ளேக் எனப்படும் மர்மநோய் பரவியதாகவும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி உயிரிழக்கும் அளவுக்கு தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மற்றொரு ஆப்பிரிக்க நாடும் மர்மமான வெடிப்பைக் காண்கிறது. இது சுமார் 400 பேரைப் பாதித்ததாகக் கூறப்படுகிறது. காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) காய்ச்சல், தலைவலி, இருமல், சளி மற்றும் உடல்வலி போன்றவற்றை ஏற்படுத்தும் மர்மமான வெடிப்பைக் கண்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO) தகவலின்படி, உகாண்டா நாட்டின் Panzi சுகாதார மண்டலத்தில் இதுவரை 394 வழக்குகள் மற்றும் 30 இறப்புகள் பதிவாகியுள்ளன. மலேரியா, தட்டம்மை மற்றும் பிறவற்றுடன், இன்ஃப்ளூயன்ஸா அல்லது கோவிட்-19 போன்ற சுவாச நோய்க்கிருமிகள் சாத்தியமான காரணங்களாக ஆராயப்பட்டு வருவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனை முடிவுகள் வரும் வரை, காரணம் தெளிவாக இல்லை என்று இந்த மாத தொடக்கத்தில் கண்டறியப்படாத நோயின் விசாரணையில் WHO தெரிவித்துள்ளது.





நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

சமீபத்தில் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்குபெறுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து விஜய் உரையாடினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.







சென்னை: நேர்மை, கடின உழைப்பு இருந்தால் ஏழை, எளிய மாணவர்களும் சட்டம் படித்து சிறந்த ஆளுமைகளாக முத்திரை பதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகர் பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், உயர் நீதிமன்ற முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞருமான எஸ்.கோவிந்த் சுவாமிநாதன் நினைவு சட்டக் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலமந்திர் கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. பாலமந்திர் இணை செயலாளர் லீலா நடராஜன் வரவேற்றார். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.அன்புமணி தலைமை வகித்தார்.

நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: ‘சட்டக் கல்விக்கான தொழில் வாய்ப்பு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியதாவது:


பொதுவாக, சட்டக்கல்வி என்பது மேல்தட்டு மக்களுக்கானது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. இந்த எண்ணம் மாற வேண்டும். ஏழை, எளிய மாணவ, மாணவிகளும் சட்டம் படித்து சிறந்த ஆளுமைகளாக முத்திரை பதிக்க முடியும்.அதற்கு நேர்மையும், கடின உழைப்பும் தேவை. இன்றைய தலைமுறையினர் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். சட்டக் கல்வியால் சாதனை படைத்துள்ள மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்று மாணவ, மாணவிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

சட்டக் கல்வி என்பது வெறும் தொழில் வாய்ப்பு மட்டுமல்ல. அது சராசரி மனிதனை, சமூகத்துக்கு சேவையாற்றும் மனிதாபிமானம் உள்ள மனிதனாக மாற்றிக் காட்டும். மற்ற துறைகளைவிட, சட்டம் படித்தவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதையோடு, செல்வமும் கூடுதலாகவே கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், குழு விவாதத்தில் அவருடன், மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் பஞ்சு, என்.எல்.ராஜா, சி.மணிசங்கர், டி.மோகன், பி.நடராஜன் ஆகியோரும் பங்கேற்று, மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜெ.சரவணவேல், திவாகர், விஷால், சுக்ரித் பார்த்தசாரதி, யோகேஷ்வரன், சாருலதா, தன்வீர், அத்வைத், ப்ரணவ், ஷகானா, கார்த்திக், கிருஷ்ணஸ்ரீ உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்வில் பங்கேற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிசு வழங்கி பாராட்டினார். நிறைவாக, சுஷ்மிதா நன்றி கூறினார்.




கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பரப்பளவு குறைந்து அதிக நீரைக் கொண்டதாக உருவாகின்றன. 'மரைன் ஹீட் வேவ்' மாதக் கணக்கில் தொடர்கிறது. இதனால் புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

 "எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அந்தப் பதவியையே அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்" என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது.

முன்னதாக, அதிமுக ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் போராடியபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அரசு ஊழியர்கள் பக்கம் நின்றதோடு, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் அது இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தாமல் இழுத்தடித்து வருவதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'தேனாறும், பாலாறும் ஓடும்' என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.

ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனையாக உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.

உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதிநிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

December- 7- 2024

December- 7- 2024
Award Function

Contact Us

Name

Email *

Message *

Powered by Blogger.