சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வு துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ள தனி தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் மே 14 முதல் 29-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனி தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ம் தேதிகளில் தத்கால் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு, தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம்.
விரிவான தேர்வு கால அட்டவணை, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்திதான் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை அளித்த முதல்வர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களின் தொடர்பு எண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துவண்டுவிடாதீர்கள். உடனே துணை தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுங்கள்.
நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு உறுதி செய்யும் - தமிழக முதல்வர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, தேர்ச்சி பெற்ற 7.47 லட்சம் மாணவ, மாணவிகளின் பெற்றோரது செல்போன் எண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. ‘‘பிள்ளைகளை கட்டாயம் உயர்கல்வியில் சேர்க்க வேண்டும்’’ என்று அந்த பதிவில் முதல்வர் கூறியுள்ளார்.
Post a Comment