3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட சிறப்பு: மாநில திட்டக் குழு தகவல்




 சென்னை: தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல் அடைவு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மாணவர்களின் கற்றல் விளைவுகளை அறிந்து மேம்படுத்தவும், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கிடையே மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சில தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை சற்று பின்தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக ஆராய்வதற்காக பிரத்யேக ஆய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக ஏற்கெனவே நடத்திவரும் ‘ஸ்லாஸ்’ தேர்வை மாநிலத் திட்டக்குழுவுடன் இணைந்து விரிவாக மாநிலம் முழுவதும் உள்ள 45,924 அரசு, அரசு உதவி பள்ளிகளிலும் நடத்த முடிவானது.

அதன்படி நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களில் 9 லட்சத்து 80,341 (66%) பேர்களிடம் ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த ஆய்வுத் தரவுகளின்படி தயாரிக்கப்பட்ட மாநில அளவிலான கற்றல் அடைவுத்தேர்வு-2025 எனும் தொகுப்பறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (மே 10) சமர்பித்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஜெயரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: இத்தகைய ஆய்வு முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. இந்த ‘ஸ்லாஸ்’ தேர்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதற்கான வினாத்தாளில் 3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெற்றன. தேர்வறை கண்காணிப்பாளர்களாக கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 38,760 பேர் செயல்பட்டனர்.

இந்த ஆய்வின் சிறப்பம்சம் அதிகளவிலான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாகும். அதிலும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது, 3, 5-ம் வகுப்புகளுக்கு தலா 20 மாணவர்கள் மற்றும் 8-ம் வகுப்புக்கு 30 பேர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின்படி 3-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 67%, ஆங்கிலத்தில் 69%, கணிதத்தில் 54%, சூழ்நிலையியல் 76% அடைவை பெற்றுள்ளனர். 5-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 76%, ஆங்கிலத்தில் 51%, சூழ்நிலையியல் மற்றும் கணிதத்தில் 57% அடைவை பெற்றுள்ளனர்.

இதேபோல், 8-ம் வகுப்பு மாணவர்களை பொருத்தவரை தமிழ் பாடத்தில் 52%, ஆங்கிலத்தில் 39%, கணிதத்தில் 38%, அறிவியல் 37%, சமூக அறிவியல் பாடத்தில் 54% அடைவு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2021-ம் ஆண்டு மத்திய அரசின் நாஸ் ஆய்வுடன் ஒப்பிடுகையில்தமிழகத்தின் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட உயர்ந்துள்ளது. குறிப்பாக ‘எண்ணும் எழுத்தும்’ உட்பட சில திட்டங்களால் 3, 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவு நிலை சிறப்பாக நிலையில் உள்ளது. அதேநேரம் 8-ம் வகுப்பு கணிதத்தில் மட்டும் மாணவர்கள் சற்று பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு கரோனா பரவலால் 2 ஆண்டுகள் ஏற்பட்ட கற்றல் இடைவெளி முக்கிய காரணமாக உள்ளது. ‘இல்லம் தேடிக் கல்வி’ உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அந்த இடைவெளியை முழுமையாக சரியாகவில்லை. மாவட்டவாரியான தரநிலையில் அனைத்து வகுப்பு மற்றும் பாடங்களிலும் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கடலூர், மதுரை, தென்காசி, சிவகங்கை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

அதேபோல், கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தரவரிசையில் கடைசி இடங்களில் உள்ளன. தற்போதைய ஆய்வு முடிவுகள் அடிப்படையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் செயல்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்கும், என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

மாநில திட்டக் குழு தகவல்

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

December- 7- 2024

December- 7- 2024
Award Function

Contact Us

Name

Email *

Message *

Powered by Blogger.