உகாண்டாவின் பூண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு மக்களினால் ’டிங்கா டிங்கா’ என இந்தக் காய்ச்சலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களையும் சிறுமிகளையும்தான் அதிகம் பாதிப்பதாக உகாண்டா நாட்டின் ஊடகமான ’தி மானிட்டர்’ தெரிவித்துள்ளது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பதில்கூடச் சவாலை உண்டாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரையில் இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் கியிதா கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்தச் சிகிச்சையினால் பாதிக்கப்பட்டோர் ஒருவார காலத்திற்குள் குணமடைந்து விடுகின்றனர். பூண்டிபுக்யோ மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் இந்த நோய் பரவவில்லை. மூலிகை மருத்துவம் இந்த நோயைக் குணப்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
நாங்கள் குறிப்பிட்ட சிகிச்சைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்திற்குள் உள்ள சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற உள்ளூர் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய்க்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று இதற்கு முன்னர் 1518 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் டேன்சிங் ப்ளேக் எனப்படும் மர்மநோய் பரவியதாகவும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி உயிரிழக்கும் அளவுக்கு தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மற்றொரு ஆப்பிரிக்க நாடும் மர்மமான வெடிப்பைக் காண்கிறது. இது சுமார் 400 பேரைப் பாதித்ததாகக் கூறப்படுகிறது. காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) காய்ச்சல், தலைவலி, இருமல், சளி மற்றும் உடல்வலி போன்றவற்றை ஏற்படுத்தும் மர்மமான வெடிப்பைக் கண்டு வருகிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO) தகவலின்படி, உகாண்டா நாட்டின் Panzi சுகாதார மண்டலத்தில் இதுவரை 394 வழக்குகள் மற்றும் 30 இறப்புகள் பதிவாகியுள்ளன. மலேரியா, தட்டம்மை மற்றும் பிறவற்றுடன், இன்ஃப்ளூயன்ஸா அல்லது கோவிட்-19 போன்ற சுவாச நோய்க்கிருமிகள் சாத்தியமான காரணங்களாக ஆராயப்பட்டு வருவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனை முடிவுகள் வரும் வரை, காரணம் தெளிவாக இல்லை என்று இந்த மாத தொடக்கத்தில் கண்டறியப்படாத நோயின் விசாரணையில் WHO தெரிவித்துள்ளது.
Post a Comment