Latest Post

 


    சென்னை:  அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலா தலங்களில் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி, சேலம் (ஏற்காடு) ஆகிய மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக காத்திருப்போர் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.

தேர்வுப் பட்டியலில் உள்ள மாணவர்கள் பங்கேற்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கலாம. சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்பவருக்கு பெற்றோர் ஒப்புதல் கடிதம் அவசியம்.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான உடைமைகள், அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும். மாணவிகளை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் 20 பேருக்கு பெண் ஆசிரியர் ஒருவரை அனுமதிக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். பயிலரங்கச் செயல்பாடுகள், பயிற்சிக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்துக்கு மாணவிகளும், சேலம் மாவட்டத்துக்கு மாணவர்களும் கோடை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த மாத கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

    சென்னை:  ஜூலை மாதம் நடைபெறவுள்ள 10, 11ம் வகுப்பு துணை தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த 10, 11ம் வகுப்பு (பிளஸ் 1) பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்கள் மற்றும் தகுதியுள்ள தனி தேர்வர்களிடம் இருந்து துணை தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. துணை தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மே 22 முதல் ஜூன் 4ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர்கள் அரசு தேர்வு துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை தேர்வு துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்.

கடைசி நாளான ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்காவிட்டால், சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கட்டணத்துடன் ஜூன் 5, 6ம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணம் 10ம் வகுப்புக்கு ரூ.500 மற்றும் 11ம் வகுப்புக்கு ரூ.1,000 ஆகும். 2024-25ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது.

10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனி தேர்வர்கள் (முதல்முறையாக அனைத்து பாடங்களையும் எழுதுவோர்), ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த அறிவியல் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் மே 23 முதல் 30ம் தேதிக்குள் ரூ.125 செலுத்தி பெயரை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற வேண்டும். இதை சேவை மையத்தில் காண்பித்தால் மட்டுமே கருத்தியல் (தியரி) தேர்வுக்கு பதிவுசெய்ய முடியும்.

செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்க உள்ள தனி தேர்வர்களும் தவறாமல் சேவை மையத்துக்கு சென்று, கருத்தியல் தேர்வுக்கும் விண்ணப்பித்து ஒப்புகை சீட்டு பெற வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தேர்வுக்கூட நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) பின்னர் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். நுழைவு சீட்டு இருந்தால் மட்டுமே செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 10, 11ம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.





வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து: பள்ளி கல்வித்துறை


ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதற்கிடையே திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால், சில ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து, அனைத்து இயக்குநர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பை அடுத்து 2016, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்ட நாள்கள் பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகிறது. அதனுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக் காலமும், பணிக்காலமாக ஏற்கப்படுகிறது.

அந்த வேலைநிறுத்தப் போராட்டங்களின் காரணமாக ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன. எனவே, பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போராட்டத்தின்போது பணியிடம் மாற்றப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்த வேண்டும். இதுசார்ந்து பொது மாறுதல் கலந்தாய்வின்போது அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 சென்னை: தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல் அடைவு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மாணவர்களின் கற்றல் விளைவுகளை அறிந்து மேம்படுத்தவும், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கிடையே மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சில தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை சற்று பின்தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக ஆராய்வதற்காக பிரத்யேக ஆய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக ஏற்கெனவே நடத்திவரும் ‘ஸ்லாஸ்’ தேர்வை மாநிலத் திட்டக்குழுவுடன் இணைந்து விரிவாக மாநிலம் முழுவதும் உள்ள 45,924 அரசு, அரசு உதவி பள்ளிகளிலும் நடத்த முடிவானது.

அதன்படி நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களில் 9 லட்சத்து 80,341 (66%) பேர்களிடம் ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த ஆய்வுத் தரவுகளின்படி தயாரிக்கப்பட்ட மாநில அளவிலான கற்றல் அடைவுத்தேர்வு-2025 எனும் தொகுப்பறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (மே 10) சமர்பித்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஜெயரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: இத்தகைய ஆய்வு முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. இந்த ‘ஸ்லாஸ்’ தேர்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதற்கான வினாத்தாளில் 3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெற்றன. தேர்வறை கண்காணிப்பாளர்களாக கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 38,760 பேர் செயல்பட்டனர்.

இந்த ஆய்வின் சிறப்பம்சம் அதிகளவிலான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாகும். அதிலும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது, 3, 5-ம் வகுப்புகளுக்கு தலா 20 மாணவர்கள் மற்றும் 8-ம் வகுப்புக்கு 30 பேர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின்படி 3-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 67%, ஆங்கிலத்தில் 69%, கணிதத்தில் 54%, சூழ்நிலையியல் 76% அடைவை பெற்றுள்ளனர். 5-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 76%, ஆங்கிலத்தில் 51%, சூழ்நிலையியல் மற்றும் கணிதத்தில் 57% அடைவை பெற்றுள்ளனர்.

இதேபோல், 8-ம் வகுப்பு மாணவர்களை பொருத்தவரை தமிழ் பாடத்தில் 52%, ஆங்கிலத்தில் 39%, கணிதத்தில் 38%, அறிவியல் 37%, சமூக அறிவியல் பாடத்தில் 54% அடைவு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2021-ம் ஆண்டு மத்திய அரசின் நாஸ் ஆய்வுடன் ஒப்பிடுகையில்தமிழகத்தின் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட உயர்ந்துள்ளது. குறிப்பாக ‘எண்ணும் எழுத்தும்’ உட்பட சில திட்டங்களால் 3, 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவு நிலை சிறப்பாக நிலையில் உள்ளது. அதேநேரம் 8-ம் வகுப்பு கணிதத்தில் மட்டும் மாணவர்கள் சற்று பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு கரோனா பரவலால் 2 ஆண்டுகள் ஏற்பட்ட கற்றல் இடைவெளி முக்கிய காரணமாக உள்ளது. ‘இல்லம் தேடிக் கல்வி’ உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அந்த இடைவெளியை முழுமையாக சரியாகவில்லை. மாவட்டவாரியான தரநிலையில் அனைத்து வகுப்பு மற்றும் பாடங்களிலும் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கடலூர், மதுரை, தென்காசி, சிவகங்கை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

அதேபோல், கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தரவரிசையில் கடைசி இடங்களில் உள்ளன. தற்போதைய ஆய்வு முடிவுகள் அடிப்படையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் செயல்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்கும், என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.




சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லையெனில், மாணவர்கள் மறுகூட்டலுக்கு எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கும் முறை 1982-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

அதன்பின் பிளஸ் 2 தேர்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களின் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மாணவர்கள் விரும்பினால் நகல் எடுத்து கொள்ளவும், தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யவும் 2001-ல் அனுமதி தரப்பட்டது. இந்த அறிவிப்பு 2009-ம் ஆண்டு மற்ற பாடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இனிவரும் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்யுமாறும், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் தேர்வர்கள் முதலில் தங்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதை பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென தேர்வுத் துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதையேற்று அந்த நடைமுறையை செயல்படுத்த தேர்வுத்துறைக்கு அனுமதி தரப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பதற்கான விவரங்களை தேர்வுத் துறை வெளியிட்டது. அதில் மே 13 முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் (http://www.dge.tn.gov.in) மே 12-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

 




சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வு துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ள தனி தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்கள் மே 14 முதல் 29-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனி தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ம் தேதிகளில் தத்கால் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு, தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம்.

விரிவான தேர்வு கால அட்டவணை, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்திதான் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கை அளித்த முதல்வர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களின் தொடர்பு எண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துவண்டுவிடாதீர்கள். உடனே துணை தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுங்கள்.

நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு உறுதி செய்யும் - தமிழக முதல்வர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, தேர்ச்சி பெற்ற 7.47 லட்சம் மாணவ, மாணவிகளின் பெற்றோரது செல்போன் எண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. ‘‘பிள்ளைகளை கட்டாயம் உயர்கல்வியில் சேர்க்க வேண்டும்’’ என்று அந்த பதிவில் முதல்வர் கூறியுள்ளார்.

 



வீட்டில் தனியாக இருந்த சிறுமி


சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் 8 ஆம் படித்து வந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 7 சிறுவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது சிறுவர்கள் சுற்றுலா வந்ததுபோல சிரித்தபடியே சென்றது அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக அந்த சிறுமியின் தாயும் கைது செய்யபட்டுள்ளார்.


அப்பகுதியில் வாட்டர் கேன் போட்டு வந்த சிறுவன், சிறுமியின் வீட்டிலும் வாட்டர் கேன் போட்டுள்ளார். அப்போது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் அந்த சிறுவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவனது நண்பர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார். தாயும், தந்தையும் வேலைக்கு சென்றுவிடுவார்கள். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த சிறுவன் தண்ணீர் கேன் போடுவது போல் வீட்டுக்கு வந்து சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

நண்பர்களும் பாலியல் வன்கொடுமை இதன் பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். சிறுமியின் வீட்டில் ஆள் இல்லாத நேரம்பார்த்து வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படி அடிக்கடி இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது ஒரு நாள் சிறுவனின் நண்பர்களுக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து அவர்களையும் ஒரு நாள் சிறுவன் வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறான்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சிறுவனின் நண்பர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அடிக்கடி அரங்கேறியதாக கூறப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல சிறுமி சோர்வடைந்து காணப்பட்டு இருக்கிறார். அவரது செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிந்ததால், அவரது தாய் சிறுமியை அழைத்துக்கொண்டு குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு சென்றார். சிறுமி கர்ப்பம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். மேலும் இது தொடர்பாக குழந்தைகள் நல குழுமம் சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுமியின் தாய் பல்லாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 8 சிறுவர்கள் உள்பட 12 பேர் கைது இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 19), சஞ்சய் (19), முடிச்சூரை சேர்ந்த சூர்யா (22), ஈசா பல்லாவரத்தை சேர்ந்த நிக்சன் (22) ஆகிய 4 பேர் மற்றும் 8 சிறுவர்கள் என மொத்தம் 12 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், வாலிபர்களை புழல் சிறையிலும் அடைத்தனர்.

சிரித்தபடி வந்த சிறுவர்கள் இது தொடர்பான போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சிறுமியிடம் இதேபோல் ஏராளமானவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக போலீசார் கைது செய்தனர். முன்னதாக சிறுவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து ஜீப்பில் அழைத்து சென்ற போது எதோ சுற்றுலாவுக்கு அழைத்து செல்வது போல சிரித்து மகிழ்ந்தபடி வந்தது போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

December- 7- 2024

December- 7- 2024
Award Function

Contact Us

Name

Email *

Message *

Powered by Blogger.